ஹோமம் யாகம்

Homam Yagam

25 A/1, Mettupalayam Road, Goundampalayam, Coimbatore - 641030.
Contact No : +91 - 8344242526

ஹோமங்களின் அறிவியல்!

திருமூலர், ஹோமம் அல்லது யாகம் என்கிற சடங்குமுறை மதரீதியான ஒன்று என்றாலும், இதன் பின்னர் அறிவியலின் கூறுகள் இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

ஒலியின் மூலம் அதிர்வுகள், ஒளியின் மூலம் வெப்பம். யாகம் என்பது இந்த இரண்டு சக்திகளை ஒருங்கினைக்கும் ஒரு நிகழ்வு. இந்த ஒருங்கினைப்பு மனித உடலுக்கும், உள்ளத்துக்கும் நன்மை விளைவிப்பதோடு, யாகம் செய்யும் இடத்தின் சுற்றுப்புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாகவே இந்த அறிவியல் வாதங்கள் முன்வைக்கப் படுகின்றன.

அமெரிக்க அறிவியலார் Dr.Howard steingull என்பவர் காயத்ரி மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது ஒரு நொடிக்கு 1,10,000 ஒலி அலைகள் உருவாவதாக கூறுகிறார். இந்த அதிர்வானது உச்சரிப்பவரின் உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் கூறியிருக்கிறார். இது மாதிரி ஒவ்வொரு மந்திரமும் தனித்துவமான அதிர்வுகளை உருவாக்கக் கூடியவை. இம் மாதிரியான மந்திரங்களை ஒத்திசைவுடன் குழுவாக சொல்லும்போது அவை உருவாக்கும் உணர்வுகளையும், அதிர்வுகளை அந்த சூழலில் இருப்பவர்கள் அனுபவித்தே அறியமுடியும்.

யாக தீயினால் உருவாகும் புகையானது மனிதர்களுக்கும் அவர்கள் வாழும் சுற்றுப் புற சூழலிலும் பாதிப்புகளை உண்டாக்குவதாக பல தெளிவுகள் முன்வைக்கப் பட்டிருக்கின்றன. மும்பை மாநகரில் இயங்கிவரும் மருத்துவ ஆய்வு நிறுவனமான HAFFKINE INSTITUTE FOR TRAINING, RESEARCH AND TESTING நிறுவனத்தை நிறுவிய Dr. Waldemar Mordecai Haffkine இது தொடபான பல தெளிவுகளை ஆதாரப் பூர்வமாய் முன்வைத்திருக்கிறார்.

ஹோமம் செய்வதன் மூலம் தெய்வங்களை திருப்தி படுத்தி பலன்களை அடைந்திடலாம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும், சமீபத்தையை ஆய்வறிக்கைகள் ஹோமத்தின் பலன்களை அறிவியல் ரீதியாகவும் நிறுவிக் கொண்டிருக்கிறது. ஹோமத்தில் இடும் பொருட்கள் எரிவதனால் உண்டாகும் வேதிவினைகளின் பலன்களாக பின்வரும் பயன்கள் பட்டியலிடப் படுகின்றன.

பசுநெய்யை யாகத்தில் விடும் போது, சுற்றுச்சூழல் தூய்மையடைகிறது. காற்றிலுள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் இடும்போது, அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட சில வாயுக்கள் கிளம்புகின்றன. இவை ரத்த அழுத்தம், தலைவலி, ஆஸ்துமா, குடல்களில் ஏற்படும் நோய்களை குணமாக்கும் சக்தியுடையவை. நரம்பு மண்டலம் வலுவடையும். டென்ஷன் குறையும். வீடுகளில் இடமிருந்தால் பசுஞ்சாண வரட்டியையும் எரிக்கப் பயன்படுத்துங்கள். அந்தக்காலத்தில், வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த இடத்தில், பசுஞ்சாணம் சேகரித்து, வரட்டி தட்டி காயவைத்து வெந்நீர் போட, சமைக்க என பயன்படுத்தினார்கள்.

இந்தச் சாம்பலை செடி, கொடிகளில் தெளித்தால் பூச்சிகள் ஓடிவிடும். பல் தேய்க்க இந்த சாம்பலை பயன்படுத்துவார்கள். தேமல் இருந்து, அதில் பூசினால் குணமானது.

ஹோமத் தீயினால் உருவாகும் புகையானது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களில் நோய் உண்டாக்கும் கிருமிகளை அழிப்பதாகவும், மனித உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், ஹோமம் நடக்கும் இடத்தை சுற்றியிருக்கும் நீர்நிலைகள், உண்வுப் பொருட்கள் ஆகியவை நச்சுத் தன்மை அடையாதவாறு பாதுகாப்பதாகவும், காற்றில் பரவியிருக்கும் கரியமிலவாயுவினை சிதைத்து ஆக்சிஜனை அதிகரிப்பதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஹோமத்தில் உருவாகும் புகையானது சூரிய ஒளியோடு கலந்து உருவாகும் ஒளிவேதி சேர்க்கையினால் கதிர் வீச்சுகளில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் பட்டியல் தொடர்கிறது.

இறுதியாக ஒரு தகவல், யாகம் செய்வதனால் மழை வருமா?, இந்த கேள்வியும் அது தொடர்பான வாத விவாதங்களும் முடிவில்லாதவை. நவீன அறிவியலில் செயற்கை மழை எவ்வாறு உருவாக்கப் படுகிறது என பார்த்தால் விமானங்கள் மூலம் மேகக் கூட்டத்தினிடையே ‘சில்வர் அயோடைட்’ அல்லது ‘உலர் பனிக் கட்டிகள்’ தூவப் படுகின்றன. இதன் பொருட்டு மேகங்கள் குளிர்ந்து மழை பெய்கிறது. இந்த உலர் பனிக் கட்டி(dryice) என்பது திண்ம கரியமில வாயுதான். ‘வருணயாகம்’ என சொல்லப் படும் ஹோமத்தின் மூலம் இத்தகைய ஒரு அறிவியல் நிகழ்வே செயல்படுத்தப் படுகிறது என்கின்றனர்.

ஹோமம் செய்ய என்னவெல்லாம் வேண்டும்?

யஜுர்வேதத்தில் முப்பது வகையான ஹோமங்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது என்று முன்னர் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் தனித்துவமான நோக்கத்தை முன்னிறுத்தி செய்யப் படுபவை. எனவே இவற்றில் பயன்படுத்தும் பொருட்களும் வெவ்வேறானவை. பொதுவில் ஹோமங்களில் பயன்படுத்தப் படும் பொருட்களின் வகைகளை யஜுர்வேதம் பின்வருமாறு கூறுகிறது.

பலவகையான மர குச்சிகள் அல்லது விறகு, மூலிகைகள், பல வகையான தானியங்கள், பழங்கள், உலர்பழங்கள், திரவபொருட்களான நெய், பால், உண்வுப்பண்டங்கள், வாசனை திரவியங்கள், ஆடைகள், உலோகங்கள், நகைகள், கால்நடைகள் என பட்டியல் நீள்கிறது.

அகத்தியர் மற்றும் புலிப்பாணி சித்தர் தங்களின் பாடலில் பின்வருமாறு பட்டியலிடுகின்றனர்.

"நாளப்பா சமுத்துவகை சொல்லக் கேளு
நலமான அரசினொடு மாவின் சுப்பி
சுப்பென்ற மாவினோடு அத்திக் கொம்பு
சொல்வெட்டி வேர் விளாமிச்சியோடு
ஆப்பென்ற ஆலுடன்மல்லிகையின் சுப்பி
அப்பனே நெல்லிசுப்பி நாவல் சுப்பி
சுப்பென்ர அத்தி சுப்பி யிலுப்பை சுப்பி
கண்மணியே பேயத்திச் சுப்பியோடு
நப்பென்ற கடுகுரோ கணியும் கூட
நலமான எருக்கினோடு கள்ளிக்கொம்பே"
- புலிப்பாணிச் சித்தர்

"கேளப்பா மாவிலங்கு விளாஅத்தி நொச்சி
கெடியான அரசுடனே வில்வம் யெட்டி
வாளப்பா மாச்சுப்பி இதுவெட்டும்
வளமான எரிதுரும்பாம் அசுராளண்டர்
நாளப்பா துட்டகண பூதமெல்லாம்
நாடாது ஓமத்தில் வலுத்த சித்தி
மூளப்பா செபஞ்செய்து ஓம்சாந்தியென்றே
தீர்க்கமாம் ஓமத்தில் போடு போடே"
- அகத்தியர்

இந்த ஓமத் தீவளர்க்க தேவையான மூலிகைகளை ‘சமித்துக்கள்’ என்கின்றனர். இனி இந்த சமித்துகள் விவரம் பின்வருமாறு...

ஆல், அத்தி, அரசு, அகில், கருங்காலி, புரசு, அருகு, பூவரசு, நெல்லி, நாவல், எருக்கு, கடுகு ரோகிணி, வன்னி, வெட்டிவேர், மூஞ்சுப்புல், தர்ப்பைப் புல், நாயுருவி, விளாமிச்சி வேர், சந்தனம், நொச்சி, தேவதாரி, மா, போன்ற பல மூலிகைத்தாவரங்களும், விலங்குக் கழிவுகளாய் பெறப்படும் வாசனை திரவியங்களும் அடங்கும்.

ஹோம குண்டங்கள் பூமியின் மீதுதான் அமைக்கப் பட வேண்டும் என வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கிறது. இன்றைக்கு வீடுகளில் கூட தரையில் மணல் பரப்பி அதன்மீது ஹோம குண்டம் அமைப்பதன் பின்னனி இதுவாகவே இருக்க வேண்டும். மேலும் இந்த ஹோம குண்டங்கள் களி மண்ணினால் செய்து பயன்படுத்த வேண்டும். ஹோம குண்டங்கள் ஐந்து அடுக்கு உள்ளவையாக அமைய வேண்டுமென்பதும் வலியுறுத்தப் பட்டிருக்கிறது. ஹோம குண்டத்தின் உட்புறம் வட்ட வடிவமாக இருத்தல் அவசியம்.

ஹோமம் செய்பவர் ஹோம குண்டத்தின் முன்னர் கிழக்கு முகமாய் அமர்ந்தே செய்திட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. ஹோம குண்டத்தில் எழுதப்படும் எழுத்துக்கள் சுத்தமான அரிசி மாவினால் மட்டுமே எழுதப்பட வேண்டும். ஹோமத்தினை துவங்கும் முன்னரும், ஹோமம் முழுமையடைந்த பின்னரும் குருவினை மனதில் நினைத்து வணங்கிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே ஹோமம் முழுமையடைவதாக கூறப்படுகிறது.